India vs England: டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!

By Rsiva kumarFirst Published Mar 9, 2024, 4:38 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்தது. பின்னர், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கான் 56 ரன்கள் எடுக்க, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், குல்தீப் யாதவ் கூடுதலாக 3 ரன்கள் எடுத்து 30 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள், ஷேன் வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களது வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி இடம் பிடித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரையில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தற்போது 41 வயதாகும் ஆண்டர்சன் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன் மூலமாக ஷேன் வார்னேயி 708 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் நான் ஆண்டர்சனை முதன் முதலில் பார்த்தேன். அவர் பந்தை தனது கையால் கட்டுப்படுத்தியது ஸ்பெஷலாக இருந்தது.

அப்போது நாசர் ஹூசைன் தான் ஆண்டர்சனுக்கு ஆதரவு அளித்தார். கண்டிப்பாக இப்போது ஆண்டர்சனை நினைத்து நாசர் ஹூசைன் பெருமை கொள்வார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக 22 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடித்து 700 விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், அதனை ஆண்டர்சன் இன்று நிறைவேற்றிவிட்டார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!