மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 16ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இதுவரையில் நடந்த போட்டிகளின் படி டெல்லி கேபிடல்ஸ் கடந்த சீசனைப் போன்று இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2ஆவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி 3ஆவது இடத்திலும் உள்ளன.
யுபி வாரியர்ஸ் 4ஆவது இடத்திலும், குஜராத் ஜெயிண்ட்ஸ் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் தான், இன்று நடக்கும் 16ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் மன்னட் காஷ்யப் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பாரதி புல்மாலி மற்றும் சினே ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் இரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), யாஷ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹீலே மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், சஜீவன் சஜனா, பூஜா வஸ்த்ரேகர், ஹுமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), போப் லிட்ச்ஃபீல்டு, அஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, பாரதி புல்மாலி, கத்ரின் பிரைஸ், சினே ராணா, தனுஜா கன்வர், மேக்னா சிங், ஷப்னம் முகமது ஷகில்.