சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஹிட்மேன்

By karthikeyan VFirst Published Jan 29, 2020, 3:00 PM IST
Highlights

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 
 

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அவரது கெரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கியபோது சோபிக்கவில்லை. படுமோசமாக சொதப்பியதால் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கூட கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், முன்னாள் கேப்டன் தோனியால் 2013ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்கவீரராக இறக்கப்பட்டார் ரோஹித் சர்மா. 

தொடக்க வீரராக இறக்கப்பட்ட அதே ஆண்டிலேயே, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசிய ரோஹித் சர்மா, அதற்கடுத்த ஆண்டிலேயே தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் விளாசினார். 2014ல் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை குவித்து சாதனை படைத்தார். இனிமேல் முறியடிக்கவே முடியாத அந்த சாதனையை படைத்த ரோஹித் சர்மா, 2017ல் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக ரோஹித் சர்மா திகழ்கிறார். 

அதேபோல டி20 கிரிக்கெட்டிலும் அபாரமாக ஆடி 4 சதங்களை அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரரும் ரோஹித் சர்மா தான். இவ்வாறு, தொடக்க வீரராக இறங்கிய பின்னர், அதிரடியாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 65 ரன்களை அடித்தார். 

இந்த போட்டியில் அடித்த ரன்களின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 10000 ரன்களை கடந்துவிட்டார் ரோஹித் சர்மா. இதன்மூலம் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோருக்கு அடுத்து, தொடக்க வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 
 

click me!