ஆரம்பத்தில் அதகளம்.. நடுவுல மந்தம்.. டெத் ஓவரில் ஓரளவுக்கு ஓகே.. நியூசிலாந்து அணிக்கு ரெண்டுங்கெட்டான் இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan VFirst Published Jan 29, 2020, 2:09 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் மந்தமாக பேட்டிங் ஆடியதால், அந்த அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் இரண்டு டி20 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் ஆரம்பத்திலேயே அதிரடியை தொடங்கினர். ராகுல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ரோஹித் சர்மா ரொம்ப ஓவராக அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடிவந்தார். 5 ஓவரில் இந்திய அணி 42 ரன்கள் அடித்திருந்தது. 

இந்நிலையில், பவர்ப்ளேவின் கடைசி ஓவரான 6வது ஓவரை பென்னெட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் சிங்கிள் எடுக்க, அதன்பின்னர் பேட்டிங் முனைக்கு சென்ற ரோஹித் சர்மா, அந்த ஓவரை டார்கெட் செய்து விளாசி தள்ளினார். 2 மற்றும் 3வது பந்துகளில் சிக்ஸர்கள் விளாசிய ரோஹித், அடுத்த இரண்டு பந்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசி அணியின் ஸ்கோரை 69 ரன்கள் ஆக்கியதுடன் 23வது பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். 

இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ராகுல் 19 பந்தில் 27 ரன்கள் அடித்து 9வது ஓவரில் ஆட்டமிழந்தார். 9 ஓவருக்கே இந்தியா நி 90 ரன்கள் அடித்துவிட்டது. ரன்ரேட் 10ல் இருந்தது. ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி எந்தவித டென்ஷனும் இல்லாமல் அடித்து ஆடட்டும் என்பதற்காக ஷிவம் துபே மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார். 

ஆனால் ஷிவம் துபே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் படுமோசமாக சொதப்பியதோடு ரோஹித் மீதான அழுத்தத்தையும் அதிகரித்துவிட்டார். முதல் நான்கு பந்தில் ரன்னே அடிக்காத துபே, ஐந்தாவது பந்தில்தான் சிங்கிளே எடுத்தார். இதனால் ரன்ரேட் குறைய தொடங்கியதும், கொஞ்சம் கூட நிதானிக்கமுடியாமல், அடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா, ஒரு தவறான பந்தை அடித்து ஆட்டமிழந்தார். பென்னெட் வீசிய ஸ்லோ டெலிவரியை தூக்கியடித்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து 7 பந்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து துபேவும் நடையை கட்டினார். ஷிவம் துபேவின் மந்தமான பேட்டிங்கால் 10 மற்றும் 11வது ஓவர்களில் ரன்ரேட் குறைந்ததுடன் ரோஹித்தும் அவுட்டானார். துபேவும் சரியாக ஆடாமல் அவுட்டானார். அதன்பின்னர் இந்திய அணியின் ஸ்கோர் எழவேயில்லை. விராட் கோலி ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயரும் பெரியளவில் அதிரடியாக ஆடாததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 

10வது ஓவர் முதல் 16வது ஓவர் வரையிலான 7 ஓவர்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் ஸ்கோர் மிடில் ஓவர்களில் படுமோசமாக குறைந்தது. கடைசி 4 ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயரும் கோலியும் 17 மற்றும் 19வது ஓவர்களில் முறையே ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்தில் 17 ரன்களும் கோலி 27 பந்தில் 38 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டேவும் ஜடேஜாவும் கடைசி ஓவரில் தலா ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவரில் இந்திய அணி 179 ரன்கள் அடித்தது. 

இந்திய அணி போன வேகத்திற்கு அசால்ட்டாக 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கலாம். ஆனால் 9 ஓவருக்கு மேல், எஞ்சிய 11 ஓவர்களில் ஒரு ஓவர் கூட பெரிய ஓவராக இந்திய அணிக்கு அமையவில்லை. எனவே இந்திய அணி வெறும் 179 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இது மிகவும் குறைவான ஸ்கோர் தான். நியூசிலாந்து அணி இந்த ஸ்கோரை எளிதாக அடித்துவிடுவதற்கான வாய்ப்புள்ளது. இந்திய பவுலர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். இல்லையெனில் ரொம்ப கஷ்டம். 
 

click me!