வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் பிசியோதெரபிஸ்ட் ஓடி வந்து சிகிச்சை அளித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் லக்னோவில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு வலது கையின் மணிக்கட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிசியோதெரபிஸ்ட் ஓடி வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். எனினும், பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக அவருக்கு காயம் ஏற்பட்ட அதே இடத்தில் தான் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிந்த போது ரோகித் சர்மாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வெளியேறிய அவர் கையில் கட்டு போட்டுக் கொண்டு மைதானத்திற்கு வந்தார். எனினும், அப்போது பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியானது ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு 100ஆவது போட்டியாகும். இவரது தலைமையிலான இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் 2 போட்டிகளில் டிரா அடைந்துள்ளது. இதே போன்று 39 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள ரோகித் சர்மா 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 9 போடிகளில் தோல்வி அடைந்துள்ளார். மேலும் ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. மேலும், ஒரு கேப்டனாக விளையாடிய 51 போட்டிகளில் 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.
இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் முறையே 0, 131, 86, 48 46 என்று மொத்தமாக 311 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் மட்டுமே 17 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறமாட்டார் என்று தகவல் வெளியானது.