#ENGvsIND சேவாக் பாணியில் சிக்ஸருடன் சதத்தை எட்டிய ஹிட்மேன்..! இங்கி.,யை துவைத்தெடுக்கும் ரோஹித் - புஜாரா ஜோடி

By karthikeyan VFirst Published Sep 4, 2021, 8:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா சதமடித்துள்ளார். புஜாராவும் 48 ரன்களுடன் களத்தில் நிற்க, 3ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலியும் ஷர்துல் தாகூரும் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூரும் 57 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 99 ரன்கள் பின் தங்கியது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். நன்றாக ஆடிய ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

ஆனால், இந்த தொடரில் இதற்கு முந்தைய போட்டியில் தனக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றமுடியாமல் தவித்த ரோஹித் சர்மா, இந்த இன்னிங்ஸில் அந்த தவறை செய்யவில்லை. கொஞ்சம் கூட அவசரப்படாமல், தனது பொறுப்பை உணர்ந்து அருமையாக ஆடிய ரோஹித் சர்மா சதமடித்தார். 94 ரன்கள் இருந்தபோது, மொயின் அலியின் பந்தில் இறங்கிவந்து 78மீ தொலைவிற்கு சிக்ஸரை அடித்து சேவாக் பாணியில் சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மாவுக்கு, இந்தியாவிற்கு வெளியே இதுதான் முதல் சதம். இதற்கு முந்தைய 7 சதங்களையும் அவர் இந்தியாவில் தான் அடித்திருந்தார். இந்தியாவிற்கு வெளியே முதல் சதத்தை பதிவு செய்தார்.

ரோஹித் சதமடிக்க, அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிவரும் புஜாரா 48 ரன்களுடன் அரைசதத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், 3ம் நாள் ஆட்டத்தின் 2வது செசன் முடிந்தது. டீ பிரேக் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

click me!