ENG vs IND: ரிஷப் பண்ட் அபார சதம்.. பாண்டியா அரைசதம்! 3வது ODIயில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Jul 17, 2022, 10:47 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் அபாரமான சதத்தால் 260 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்திருந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. மான்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற   இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா  ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் ஆடினார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடன் கர்ஸ், ரீஸ் டாப்ளி.

இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி
 
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய இருவரையும் ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். ஜேசன் ராயும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து  சிறப்பாக ஆட, அந்த ஜோடியை பாண்டியா பிரித்தார். ராயை 41 ரன்னிலும், ஸ்டோக்ஸை 27 ரன்னிலும் வீழ்த்தினார் பாண்டியா. 

அதன்பின்னர் கேப்டன் பட்லரும் மொயின் அலியும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். 5வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 75 ரன்களை சேர்த்தனர். மொயின் அலியை 34 ரன்களுக்கு ஜடேஜா வீழ்த்த, பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பட்லர் 60  ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோனையும் ஹர்திக் பாண்டியாவே வீழ்த்தினார். பின்வரிசையில் க்ரைக் ஓவர்டன் சிறப்பாக பேட்டிங் ஆடி 32 ரன்கள் அடிக்க, 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை ஒரு ரன்னில் வீழ்த்திய ரீஸ் டாப்ளி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையுமே தலா 17 ரன்களுக்கு வெளியேற்றினார். சூர்யகுமார் யாதவும் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 72 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடிக்க, 5வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 133 ரன்களை சேர்த்தனர்.

இதையும் படிங்க - கோலி 70 சதங்களை கேண்டி கிரஷ் விளையாடியா அடிச்சாப்ள..? அவரு கிரேட் பிளேயர்.. அக்தர் அதிரடி

இந்திய அணி வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 260 ரன்கள் என்ற இலக்கை 43வது ஓவரில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-1  என ஒருநாள் தொடரை வென்றது. ரிஷப் பண்ட் 125 ரன்களை குவித்தார்.
 

click me!