தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் கெரியர் முடிந்தது என்று நினைத்தபோது, 37 வயதில் தனது திறமையை மேம்படுத்திக்கொண்டு இன்றைக்கு டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக உருவாவதெல்லாம் மிக மிகக்கடினம் என்றும், அதை தினேஷ் கார்த்திக் சாதித்து காட்டியிருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட்கீப்பர்- பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். அதே காலக்கட்டத்தில் தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தனக்கான இடத்தை பிடித்து கேப்டன்சியையும் கைப்பற்றிவிட்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அவ்வப்போது இந்திய அணிக்கு ஆட கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக ஆடி அசத்திவிடுவார். 2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதன்விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், பின்னர் மீண்டும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
undefined
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா
ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடிய தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி ஆர்சிபி அணிக்கு பல போட்டிகளை அதிரடியாக ஆடி முடித்து கொடுத்து ஃபினிஷராக அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இந்த முறை இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை, அருமையாக பயன்படுத்தி அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை ஒரு சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார். இதற்கு முன்பு இருந்ததைவிட பன்மடங்கு பலமாக, தனது திறமையை மேலும் மெருகேற்றிக்கொண்டு வந்துள்ளார். அதுவும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் மற்றும் முன்னாள் ஜாம்பவான்களால் கொண்டாடப்படும் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தனக்கான இடத்தை 37 வயதில் தினேஷ் கார்த்திக் உறுதி செய்திருப்பது மிகப்பெரிய சாதனை.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் அந்த சாதனையைத்தான் வெகுவாக புகழ்ந்திருக்கிறார் ரிக்கி பாண்டிங். தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக்கின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். ஐபிஎல்லில் கேகேஆர் அணி அவரை தக்கவைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இதை அவரே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
அவர் வர்ணனைக்கு வந்ததால் அவரது கெரியர் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால் அங்கிருந்து அவர் வேற லெவலில் மாறியிருக்கிறார். அவரது வளர்ச்சியையும் கம்பேக்கையும் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. இரண்டே மாதங்களில் அவரது கெரியரே தலைகீழாக திரும்பிவிட்டது.
அதுவும் இந்த வயதில் (37) இதை செய்வது எளிதல்ல. ஏற்கனவே இருந்ததைவிட சிறந்த வீரராக 37 வயதில் அவர் உருவெடுத்திருப்பது அசாத்திய வளர்ச்சி. இந்திய வீரர்கள் எப்போதுமே, எந்த சூழலிலுமே விட்டுக்கொடுக்க மாட்டவே மாட்டார்கள் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். தன்னை இந்திய அணி நிர்வாகம் புறக்கணிக்க முடியாதபடி செய்துள்ளார் தினேஷ் கார்த்திக் என்று ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க- டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்
ரிக்கி பாண்டிங்கின் புகழ்ச்சியால் நெகிழ்ச்சியடைந்த தினேஷ் கார்த்திக், தன்னை ஊக்கப்படுத்தும்படியான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.