#IPL2021 ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்சிபி ஹாட்ரிக் வெற்றி..! கேகேஆரை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Apr 18, 2021, 7:50 PM IST
Highlights

கேகேஆர் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. ஐபிஎல்லில் முதல் முறையாக தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி.
 

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த சீசனை சிறப்பாக தொடங்கி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

கேப்டன் கோலியும்(5), ரஜாத் பட்டிதரும்(1) 2வது ஓவரிலேயே ஆட்டமிழக்க, 9 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் க்ளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாகவே ஆடிய மேக்ஸ்வெல்லால் சென்னை வெயிலை தாங்கமுடியாமல் திணறினார்.

அதிரடியாக ஆடி 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் அடித்து 17வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் ஸ்கோர் செய்யும் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த டிவில்லியர்ஸ், ரசல், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் சிக்ஸர் மழை பொழிந்து 34 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆர்சிபி அணி 20 ஓவரில் 204 ரன்களை எட்ட உதவினார்.

20 ஓவரில் 204 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 205 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது. 205 ரன்கள் எண்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில் அதிரடியாக தொடங்கிய கில் 9 பந்தில் 21 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ராணா(18), திரிபாதி(25), தினேஷ் கார்த்திக்(2), மோர்கன்(29), ஷகிப் அல் ஹசன்(26) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கேகேஆர் அணிக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி வெறும் 166 ரன்கள் மட்டுமே அடித்து 38 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம், இந்த சீசனில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது ஆர்சிபி அணி. ஐபிஎல்லில் முதல் முறையாக ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ளது.
 

click me!