இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் சேர்த்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி ஆலி போப்பின் சிறப்பான பேட்டிங்கால் 420 ரன்கள் குவித்தது. இதில், ஆலி போப் மட்டும் அதிகபட்சமாக 196 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தான் காத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் வாரி வழங்கிய வள்ளலாக இருந்த டாம் ஹார்ட்லி 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி விக்கெட் மேல விக்கெட் கைப்பற்றினார்.
ஒரே ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரையும் அவுட்டாக்கினார். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழக்க, கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் படேல் இருவரும் தங்களது விக்கெட்டை தக்க வைத்துக் கொண்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அக்ஷர் படேல் தனது விக்கெட்டை இழந்தார். டாம் ஹார்ட்லி வீசிய ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் பந்தில் கேஎல் ராகுல் எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு வேகமாக ஓடிச் சென்று ரன் அவுட்டானார். அப்போது அவருக்கு காலி தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜடேஜா தான் வேகமாக ஓடுவார் என்று எதிர்பார்த்தால், அவரை விட வேகமாக ஓடிச் சென்று சிறப்பாக பீல்டிங் செய்த ஸ்டோக்ஸ் உருண்டு பிரண்டு பந்தை பிடித்து சரியாக ஸ்டெம்பை நோக்கி எறிந்து ஜடேஜாவை ஆட்டமிழக்கச்செய்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டை இழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் கூட்டணி சேர்ந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். கடைசியாக சிராஜ் தனது விக்கெட்டை இழக்க இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 87 ரன்களும் எடுத்தார். மேலும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த நிலையில் தான் 2ஆவது இன்னிங்ஸின் போது ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க வேகமாக ஓடிய போது ரன் அவுட்டானார். அப்போது, அவருக்கு காலி தசைபிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. போட்டிக்கு பின்னரும் கூட வலியால் அவதிபட்டிருக்கிறார். இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்குப் பதிலாக அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.