India vs England 1st Test: டாம் ஹார்ட்லி சுழலில் சுருண்ட இந்தியா – முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி!

By Rsiva kumarFirst Published Jan 28, 2024, 5:38 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆலி போப் நல்ல ஸ்கோர் எடுத்துக் கொடுத்தார். அவர் 196 ரன்களில் ஆட்டமிழக்க, பென் போக்ஸ் 34 ரன்களும், டாம் ஹார்ட்லி 34 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர்.

இதன் மூலமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் சுப்மன் கில்லும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Latest Videos

பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா 39 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேஎல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். அப்போது அக்‌ஷர் படேல் 17 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முக்கியமான விக்கெட்டான கேஎல் ராகுல் 22 ரன்கள் எடுத்திருந்த போது ஜோ ரூட் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று விளையாடாமல் அசால்டாக ஸ்லிப்பில் நின்றிருந்த ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் ரன் அவுட் முறையில் நடையை கட்டினார்.

இந்த நிலையில் தான் 119 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் ஒவ்வொரு ரன்னாக சேர்த்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர். கடைசியாக பரத் 28 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தனது அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியின் கடைசி ஓவரை டாம் ஹார்ட்லி வீசினார். இந்த ஓவரில் இறங்கி வந்து விளையாட ஆசைப்பட்ட அஸ்வின் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு ஒரு விக்கெட் கைப்பற்ற கூடுதல் ஓவர்கள் கொடுக்கப்பட்டது. இதில், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் பார்ட்னர்ஷிப் கொடுத்து விளையாடினர். கடைசியில் டாம் ஹார்ட்லி சுழலுக்கு சிராஜ் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்க இந்தியா 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஜோ ரூட் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

click me!