ஹைதராபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸ் விளையாடி 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆலி போப் 190 ரன்கள் எடுத்து கொடுக்கவே, இங்கிலாந்து 420 ரன்கள் சேர்த்தது. இதன் மூலமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சுப்மன் கில் களமிறங்கினார். அவர் 5 நிமிடம் கூட களத்தில் நிற்கவில்லை. வெறும் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 10 இன்னிங்ஸில் ஒன்றில் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை.
அதிகபட்சமாக அவர் 47 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி 10 இன்னிங்ஸ்களில் 47, 6, 10, 29*, 2, 26, 36, 10, 23, 0 என்று மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார். 15 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க அதே ஓவரில் சுப்மன் கில்லும் ஆட்டமிழந்துள்ளார். முதல் இன்னிங்ஸில் மோசமாக பந்து வீசிய டாம் ஹார்ட்லி 2ஆவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 2 முக்கிய விகெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு, ரோகித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மேலும், அக்ஷர் படேல் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.