ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்ததுடன், ஷேன் வார்ன் மற்றும் ஹர்பஜன் சிங்கின் சாதனைகளை தகர்த்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 400 ரன்களை குவித்தது. அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 70 ரன்களும், அக்ஸர் படேல் 84 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு
223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார் அஷ்வின். அபாரமாக பந்துவீசிய அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2வது இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வினின் அபாரமான சுழலில் ஆஸி., அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்தார் அஷ்வின். சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்தியதில் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார் அஷ்வின். கும்ப்ளே இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள நிலையில், அஷ்வினும் இந்திய மண்ணில் 25 முறை 5 விக்கெட் வீழ்த்தி கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார். இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன்(45 முறை சொந்த மண்ணில் 5 விக்கெட்) மற்றும் ரங்கனா ஹெராத் (26 முறை) ஆகிய இருவருக்கு அடுத்து 3ம் இடத்தை கும்ப்ளேவும் அஷ்வினும் பகிர்ந்துள்ளனர்.
இந்த போட்டியில் வீழ்த்திய 5 விக்கெட் மூலம் சொந்தமண்ணில் அஷ்வின் 320 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சொந்தமண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ள அஷ்வின், ஷேன் வார்னின் சாதனையை முறியடித்துள்ளார்.
நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்(95) மற்றும் நேதன் லயன்(95) ஆகிய இருவரின் சாதனையையும் முறியடித்துள்ளார் அஷ்வின். அஷ்வின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட்டில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.