லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 4ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 4ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஒரு கேப்டனாக எப்படி விளையாடனும் என்று வழிகாட்டிய சஞ்சு சாம்சன் – அரைசதம் அடித்த முதல் கேப்டன்!
போட்டியின் முதல் ஓவரிலேயே தாமதம் ஏற்பட்டது. அதாவது, ஸ்பைடர் கேமராவின் வயர் அறுந்து விழுந்ததால் தாமதம் ஏற்பட்டது. இதில், போட்டியின் 2ஆவது ஓவரில் ஜோஸ் பட்லர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி வந்தனர்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருபுறம் ரியான் பராக் 29 பந்துகளில் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷிம்ரான் ஹெட்மயர் 5 ரன்னில் வெளியேற கடைசியாக துருவ் ஜூரெல் களமிறங்கினார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய சாம்சன் 52 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்து இந்த சீசனில் 3ஆவது அணியாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்த வரையில் பவுலிங்கில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டும், மோசின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.