கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 53 ரன்கள் கொடுத்துள்ளார்.
துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 3 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 53 ரன்கள் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்திய அணியைச் சேர்ந்த ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோல், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜஸ்ப்ரித் பும்ரா என்று யாருக்கும் இல்லாத வகையில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு ரூ.24.75 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து மற்றொரு ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.
இப்படி இரு ஆஸி வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் இந்திய வீரர்கள் தான் சிறப்பாக விளையாடி ரன்களும், விக்கெட்டுகளும் கைப்பற்றி வருகின்றனர். நேற்று நடந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று கேகேஆர் அணியில் ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
மிட்செல் ஸ்டார் வீசும் ஒவ்வொரு பந்திற்கும் ரூ.7,36,607 ஊதியமாக அளிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடிய நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ளார். தனது முதல் போட்டியிலே அவர் 53 ரன்கள் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். 2ஆவது ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். 3ஆவது ஓவரில் 5 ரன்கள் கொடுக்க, கடைசியாக கடைசி ஓவரில் 26 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். போட்டியின் 18.9ஆவது ஓவரில் ஷாபாஸ் அகமது சிக்ஸர் அடித்தார். அப்போது வர்ணனையில் இருந்தவர்கள் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்பதால், கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் என்று விமர்சனம் செய்தனர்.
எனினும், இந்தப் போட்டியில் எப்படியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் 4 ரன்களில் ஹர்ஷித் ராணாவின் அபார பந்து வீச்சால் கேகேஆர் ஜெயித்துவிட்டது. எனினும், முதல் போட்டி என்பதால், அவர் மீது அதிகளவில் விமர்சனம் முன்வைக்கப்படவில்லை. வரும் 29 ஆம் தேதி கேகேஆர் தனது 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Bollywood King Shah Rukh Khan with Mitchell Starc & Pat Cummins.💜🧡 pic.twitter.com/ZKQGINpE07
— The Cricket TV (@thecrickettvX)