இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் இந்த உலகக் கோப்பையுடன் முடிவடையும் நிலையில் அடுத்து நடக்க இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் தான் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் இந்த 2023 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்று அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு 2018ல் டிராபியையும் வென்றார்.
இதன் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரிக்குப் பிறகு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். ஆனால், இவரது தலைமையிலான இந்திய அணி பெரிதாக எந்த ஐசிசி டிராபியையும் கைப்பற்றவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தது. ஆனால், 2023 ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியனானது.
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பையைத் தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இயக்குநராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க ராகுல் டிராவிட் விரும்பாத நிலையில், அடுத்து நடக்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.