
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், சவுத் சகீல் 52 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிக்கா அணியில் குயீண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரை இப்திகார் அகமது வீசினார். இதில், முதல் பந்தை வைடாக வீச, பந்து பவுண்டரிக்கு செல்லவே 5 ரன்கள் கொடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் முதல் பந்து வீசப்பட்டது. அதில், பவுமா ரன் எடுக்கவில்லை. 2ஆவது பந்தை எதிர்கொண்ட பவுமா லைக்ஸைடு லாங் ஆன் திசையை நோக்கி அடித்தார். அங்கு பீல்டிங்கில் நின்றிருந்த ஷதாப் கான், பந்தை பிடித்து ஸ்டெம்பை நோக்கி வீசும் போது கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எழுந்திருக்க முடியாமல் மைதானத்திலேயே படுத்திருந்த நிலையில், மைதானத்திற்கு ஸ்ட்ரெட்சர் கொண்டு வரப்பட்டது. மேலும், மருத்துவர்களும் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு காயத்துடன் எழுந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக (concussion substitute) மாற்று வீரராக போட்டியில் இடம் பெறாத உசாமா மிர் இடம் பெற்று பந்து வீசினார்.
இது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷதாப் கானுக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் அணி எடுத்துள்ளது. ஷதாப்புக்கு பதிலாக உசாமா மிர் களமிறங்குவார். பீல்டிங் செய்யும் போது ஷதாப் தலையில் அடிபட்டார். இதன் காரணமாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். ஆனால் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் மருத்துவக் குழு அவரை மாற்ற முடிவு செய்தது. மாற்றுக் கோரிக்கை போட்டி நடுவரால் அங்கீகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.