டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மொகாலியில் உள்ள முல்லன்பூரின் புதிய மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மட்டும் 33 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த இம்பேக்ட் பிளேயர் அபிஷேக் ஜூரெல் கடைசி ஓவரில் மட்டும் 4, 6, 4, 4, 6, 1 என்று வரிசையாக 25 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 174 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்களில் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த பிராப்சிம்ர்ன் சிங் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் சாம் கரண் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சாம் கரண் 47 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
மதுபான லோகோ இல்லாத சிஎஸ்கே ஜெர்சியில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மானுக்கு குவியும் பாராட்டு!
கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்படவே, சுமித் குமார் முதல் 2 பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்தில் லியாம் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடிக்கவே பஞ்சாப் கிங்ஸ் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வரிசையாக வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் போட்டி டையான நிலையில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.