சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வங்கதேச வீரர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் எந்தவித மதுபானம் தொடர்பான லோகோ இல்லாத ஜெர்சியை அணிந்து ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வளைகுடா விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தனது அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியின் ஜெர்சியின் பின்புறம் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதே போன்று, எஸ்.என்.ஜே என்ற கார்ப்பரேட் நிறுவனம் சிஎஸ்கே அணியுடன் ஆல்கஹால் விளம்பர ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. அதன்படி சிஎஸ்கேயின் ஜெர்சியில் எஸ்.என்.ஜே.1000 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இது போன்று லோகோ உடன் இருக்கும் ஜெர்சியை அணிந்து சிஎஸ்கே வீரர்கள் நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் விளையாடி வருகின்றனர்.
ஆனால், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெற்றார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிளேயிங் 11ல் முஷ்தாபிஜூர் ரஹ்மானும் இடம் பெற்று விளையாடி 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
இதில், அவர் அணிந்திருந்த ஜெர்சியில் எஸ்என்ஜே1000 என்று அச்சிடப்பட்டிருந்த மதுபான லோகோ இடம் பெறவில்லை. தனது ஜெர்சியில் இது போன்று மதுபான லோகோ இடம் பெறக் கூடாது என்று முஷ்தாபிஜூர் ரஹ்மான் திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும், அதனால், அவரது ஜெர்சியில் மதுபானம் தொடர்பான லோகோ இடம் பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
IPL 2024: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் – வைரலாகும் ரச்சின் – ரவீந்திரா புகைப்படம்!
இதற்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹசீம் ஆம்லா கூட தனது ஜெர்சியில் மதுபானம் தொடர்பான எந்த விளம்பரமும் இருக்க கூடாது என்று மறுத்துவிட்டாராம். அதே போன்று தான் தற்போது முஷ்தாபிஜூர் ரஹ்மானும் தனது ஜெர்சியில் மதுபான பொருட்களுக்கான விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். சிஎஸ்கே அனுமதியும் அளித்துள்ள நிலையில், முஷ்தாபிஜூர் மதுபான லோகோ இல்லாத ஜெர்சியுடன் முதல் போட்டியில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.