பிரித்வி ஷா வெறித்தனமான பேட்டிங்; நூலிழையில் மிஸ்ஸான இரட்டை சதம்..! அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 3:03 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி டெல்லியில் நடந்தது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி 50 ஓவரில் 284 ரன்கள் அடித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய சமர்த் வியாஸ் அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்தார். விஷ்வராஜ் ஜடேஜா மற்றும் சிராக் ஜானி ஆகிய இருவரும் தலா 53 ரன்கள் அடித்தனர். 

இதையடுத்து 285 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்த தொடர் முழுவதுமே மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதம், சதம் என ரன்களை குவித்துவரும் பிரித்வி ஷா, முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்தார். அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு 2 இளம் வீரர்களும் இணைந்து 238 ரன்களை குவித்தனர்.

அதன்பின்னர் பிரித்வி ஷாவுடன் ஆதித்ய தரே இணைந்தார். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 123 பந்தில் 21 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 185 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்று மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பிரித்வி ஷாவின் அதிரடியால் 42வது ஓவரிலேயே 285 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

185 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக இருந்தும் இலக்கை எட்டிவிட்டதால், பிரித்வி ஷாவால் இரட்டை சதமடிக்க முடியாமல் போனது. அரையிறுதியில் கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி.
 

click me!