பிரத்வி ஷாவின் மற்றுமொரு முரட்டு இன்னிங்ஸ்..! அரையிறுதியில் கர்நாடகாவை அடித்து நொறுக்கி பெரிய சதம்

By karthikeyan VFirst Published Mar 11, 2021, 2:00 PM IST
Highlights

கர்நாடகாவுக்கு எதிரான விஜய் ஹசாரே அரையிறுதி போட்டியில், பிரித்வி ஷாவின் மிகச்சிறந்த இன்னிங்ஸால் 322 ரன்களை குவித்து, 323 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது மும்பை அணி.
 

கடந்த 2 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சரியாக ஆடாமலோ அல்லது காயத்தால் எந்த தொடரிலும் முழுமையாக ஆடாமலோ இருந்துவந்த பிரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் செம ஃபார்மில் ஆடி ரன்களை குவித்துவருகிறார் பிரித்வி ஷா.

நடப்பு விஜய் ஹசாரே தொடரில், இரட்டை சதம், சதங்கள் என ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ஸ்கோர் செய்துவருகிறார். மும்பை அணி விஜய் ஹசாரே தொடரின் காலிறுதிக்கு முன்னேற பிரித்வி ஷா முக்கிய காரணம். காலிறுதிக்கு அழைத்துவந்த பிரித்வி ஷா, இறுதிவரை தனி நபராக எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உறுதியில் ஆடிவருகிறார்.

சவுராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 185 ரன்களை குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த பிரித்வி ஷா, கர்நாடகாவுக்கு எதிராக நடந்துவரும் அரையிறுதி போட்டியில் 122 பந்தில் 165 ரன்களை குவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி டெல்லியில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற கர்நாடகா அணி, பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும் ஆதித்ய தரே 16 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஷாம்ஸ் முலானி 45 ரன்கள் அடித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், வழக்கம்போலவே தொடக்கம் முதலே தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்தார். சதத்திற்கு பின்னர் சோடை போய்விடாமல், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றி 165 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. இந்த விஜய் ஹசாரே தொடர் முழுவதும் இதைத்தான் செய்துவருகிறார் பிரித்வி ஷா.

122 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 165 ரன்களை குவித்து 41வது ஓவரில் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவிற்கு இந்த போட்டியிலும் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் இம்முறையும் இரட்டை சதம் தவறிவிட்டது. ஆனாலும் அவர் அணிக்காக செய்ய வேண்டிய கடமையை ஒரு கேப்டனாகவும் ஒரு தொடக்க வீரராகவும் செவ்வனே செய்தார் பிரித்வி ஷா.

பிரித்வி ஷா 41வது ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழக்கும்போது மும்பை அணியின் ஸ்கோர் 243 ரன்கள் ஆகும். அதன்பின்னர் மும்பை வீரர்கள் இணைந்து கூடுதலாக 79 ரன்களை சேர்த்தனர். 49.2 ஓவரில் 322 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்டானது.

இதையடுத்து 323 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டுகிறது கர்நாடக அணி. நாக் அவுட் போட்டியில் 323 ரன்கள் என்பது மிகக்கடின இலக்கு.
 

click me!