பீட்டர்சனின் காட்டடியால் இந்தியா லெஜண்ட்ஸை வீழ்த்தி இங்கிலாந்து லெஜண்ட்ஸ் வெற்றி!இர்ஃபான் பதான் போராட்டம் வீண்

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 3:25 PM IST
Highlights

கெவின் பீட்டர்சனின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா லெஜண்ட்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி.
 

சாலை பாதுகாப்பு டி20 தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. ராய்ப்பூரில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று ராய்ப்பூரில் நடந்த போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கெவின் பீட்டர்சன், தொடக்கம் முதலே அடித்து ஆடி வெறும் 37 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்களை விளாசினார். அவரைத்தவிர வேறு யாருமே பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனாலும் பீட்டர்சனின் காட்டடியால் 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி.

இதையடுத்து 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, முகமது கைஃப் ஒரு ரன்னிலும், யுவராஜ் சிங் 22 ரன்னிலும், பத்ரிநாத் 8 ரன்னிலும், யூசுஃப் பதான் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் இறங்கிய இர்ஃபான் பதான் அதிரடியாக ஆடி 34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தும் 182 ரன்கள் மட்டுமே இந்தியா லெஜண்ட்ஸ் அணி அடித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்தில் தலா 2 ரன்களும், 3வது பந்தில் சிக்ஸரும் அடித்த இர்ஃபான் பதான், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க, பேட்டிங் முனைக்கு சென்ற கோனி, மன்ப்ரீத் கோனி, கடைசி 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்ததால் 182 ரன்கள் அடித்து 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி தோல்வியை தழுவ நேரிட்டது.
 

click me!