அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண்பதற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிற்கு வந்த கிராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் பிரதமர் மோடி! pic.twitter.com/lgqzTLhtGE
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த கேஎல் ராகுல்,விராட் கோலி உடன் இணைந்து ஒவ்வொரு ரன்னாக சேர்த்தனர். 11 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரையில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸருமே இல்லை. ஒன்னு, ரெண்டு என்று குருவி சேர்த்தாற் போன்று ரன்கள் சேர்த்தனர். கேஎல் ராகுல் தனது 60ஆவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். விராட் கோலி, 63 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடி 107 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து முகமது ஷமி 6, ஜஸ்ப்ரித் பும்ரா 1, சூர்யகுமார் யாதவ் 18 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இணைந்து 19 ரன்கள் எடுக்கவே, இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. குல்தீப் 10 ரன் எடுத்து ரன் அவுட்டானார். சிராஜ் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார் 3 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை பார்ப்பதற்கு அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா துணை பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான ரிச்சர்டு மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.