ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 11 முதல் 50 ஓவர்கள் வரையில் மொத்தமே 4 பவுண்டரி மட்டுமே அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், சுப்மன் கில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். ரோகித் சர்மா பவுண்டியும், சிக்சருமாக அடித்த நிலையில், 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு விராட் கோலியுடன், விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.
இருவரும், பவுண்டரியை நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒன்னு, ரெண்டு என்று ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ராகுல் 60 பந்துகளில் தனது முதல் பவுண்டரியை அடித்தார். அப்போது வரையில் கிட்டத்தட்ட 97 பந்துகள் வரையில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. இதற்கிடையில் விராட் கோலி 54 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்த கேஎல் ராகுல் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷமி ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 6 ரன்களிலும், பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது வரிசையில் அதிரடிக்கு பெயர் போன சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 28 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 18 ரன்களில் வெளியேறினார்.
கடைசியாக சிராஜ் ஒரு பவுண்டரி அடிக்கவே 11 முதல் 50 ஓவர்கள் வரையில் இந்திய அணி மொத்தமாக 4 பவுண்டரி அடித்துள்ளார். இதன் மூலமாக 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு குறைவான பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடித்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.