கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் தேசிய கீத பாடலுக்காக மைதானத்திற்குள் வந்தனர்.
அப்போது ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் அனைத்து வீரர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
இவ்வளவு ஏன், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் உலகக் கோப்பையில் தான் பெறும் சம்பளம் அனைத்தையும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது.
இதையடுத்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்தையும் கடந்தது. மேலும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளானர்.