சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையின் கீழ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2016 ஆம் ஆண்டு மட்டுமே ஒரு முறை டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால், அதில் சென்னையிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதே போன்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஜெயதேவ் உனத்கட் ரூ.1.60 கோடிக்கும், வணிந்து ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும், ஜதவேத் சுப்பிரமணியன் ரூ.20 லட்சத்திற்கும், ஆகாஷ் சிங் ரூ.20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு 6ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை மட்டுமின்றி இருதரப்பு சீரிஸ் மற்றும் ஐசிசியின் பெருவாரியான டிராபிகளை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியில் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் ஸ்பின்னர் டேனியல் வெட்டோரி, கேப்டன் பொறுப்பை பேட் கம்மின்ஸிடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த எஸ்.ஏ.20 லீக் தொடரின் 2ஆவது சீசனை எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 2ஆவது முறையாக தொடர்ந்து சாம்பியனானது. ஆதலால், எய்டன் மார்க்ரம் கேப்டனாக தொடரவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.