Bangladesh vs Pakistan கடைசி பந்தில் த்ரில் வெற்றி! வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 5:25 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.
 

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று  பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.

தாக்காவில் நடந்த இந்த போட்டியிலும் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தான் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷாண்டோ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷமீம் ஹுசைன் (22), அஃபிஃப் ஹுசைன் (20) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், நிலைத்து ஆடிய தொடக்க வீரர் முகமது நயீம் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அந்த அணியில் மற்ற யாரும் சரியாக ஆடாததால், 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே அடித்த வங்கதேச அணி, 125 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

125 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஸ்வானும் ஹைதர் அலியும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

19 ஓவரில் பாகிஸ்தான் அணி 117 ரன்கள் அடித்திருக்க, கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் நெருக்கடியான அந்த கடைசி ஓவரை சிறப்பாக வீசிய வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா, முதல் பந்தில் ரன் கொடுக்காமல், 2வது பந்தில் சர்ஃபராஸ் அகமதுவை வீழ்த்தினார். அடுத்த பந்திலேயே, 45 ரன்கள் அடித்திருந்த ஹைதர் அலியையும் வீழ்த்த, பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது. 4வது பந்தில் சிக்ஸர் அடித்த இஃப்டிகார் அகமதுவை அடுத்த பந்திலேயே மஹ்மதுல்லா வீழ்த்த, ஆட்டம் உச்சகட்ட பரபரப்படைந்தது. கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட, முகமது நவாஸ் பவுண்டரி அடித்து போட்டியை முடித்துவைத்தார்.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

click me!