ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக கண்டிப்பாக இவரைத்தான் நியமிக்கணும்..! Adam Gilchrist அதிரடி

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 4:18 PM IST
Highlights

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) கருத்து கூறியுள்ளார்.
 

2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.

அந்த 2018 தென்னாப்பிரிக்க தொடர் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திவந்த டிம் பெய்ன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 2017 பிரிஸ்பேன் டெஸ்ட்டின்போது பெண் பணியாளர் ஒருவரை பாலியலுக்கு அழைத்து, டிம் பெய்ன் ஆபாச மெசேஜ்கள், அவரது நிர்வாணப்புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியது அம்பலமானதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கூறி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டியுள்ளது. துணை கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

இனிமேல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பேயில்லை என கருதப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தும் இந்த கேப்டன்சி போட்டியில் இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தகவல் வெளியானது.

எனவே பாட் கம்மின்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரில் யார் வேண்டுமானாலும் கேப்டனாக நியமிக்கப்படலாம்.  இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், பாட் கம்மின்ஸ் தான் கேப்டன்சிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு முன்னுரிமை கொடுத்து அவரை நியமிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஃபாஸ்ட் பவுலர் என்பதற்காக அவர் வேண்டாம் என நினைக்க எந்த காரணமும் இல்லை. அணியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் அவர் மீது நிறைய மரியாதை இருக்கிறது. எனவே கம்மின்ஸையே கேப்டனாக நியமிக்கலாம் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
 

click me!