முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 657 ரன்களை குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்களை குவித்துள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது அலி, ஜாஹித் மஹ்மூத்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய இருவருமே சதமடிக்க, முதல் விக்கெட்டுக்கு வெறும் 35.4 ஓவரில் 233 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. பென் டக்கெட் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாக் க்ராவ்லி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பும் அபாரமாக பேட்டிங் ஆடினார். ஆனால் சீனியர் வீரர் ஜோ ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆலி போப் மற்றும் 5ம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 506 ரன்களை குவித்து சாதனை படைத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். முதல் நாளில் 4 வீரர்கள் சதமடித்தனர். ஆலி போப் 108 ரன்களும், ஹாரி ப்ரூக் 153 ரன்களும் குவித்தனர். லிவிங்ஸ்டோன் 9 ரன் மட்டுமே அடித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடித்தார். வில் ஜாக்ஸ் 30 ரன்களும், ஆலி ராபின்சன் 37 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. இங்கிலாந்து அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு அருமையாக பேட்டிங் ஆடினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்துள்ளது.
கமெண்ட்ரியின்போது ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
அப்துல்லா ஷாஃபிக் 89 ரன்களுடனும், இமாம் உல் ஹக் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 51 ஓவர்கள் பந்துவீசியும் இங்கிலாந்து அணியால் பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய நிலையில், தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் பேட்டிங் ஆடியுள்ளனர்.