#ZIMvsPAK முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

By karthikeyan VFirst Published May 1, 2021, 10:01 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
 

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது பாகிஸ்தான் அணி.

அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாகவே கையா 48 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸில் வெறும் 176 ரன்கள் மட்டுமே அடித்தது ஜிம்பாப்வே அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இம்ரான் பட் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், அபித் அலி 60 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த அசார் அலி 36 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக ஆடிய இம்ரான் பட் சதத்தை தவறவிட்டு 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அபாரமாக ஆடி சதமடித்த ஆலம் 140 ரன்களை குவிக்க, ரிஸ்வான் 45 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 426 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி வெறும் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ஜிம்பாப்வே அணி. 
 

click me!