T20 WC: பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் பட்டைய கிளப்பிய பாகிஸ்தான்! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவை டி.எல்.எஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
 

pakistan beat south africa by 33 runs by dls method in t20 world cup

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - தென்னாப்பிரிரிக்கா அணிகள் இன்று மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபகர் ஜமான் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முகமது ஹாரிஸ் அணியில் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. டேவிட் மில்லர் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசனும், கேஷவ் மஹராஜுக்கு பதிலாக டப்ரைஸ் ஷம்ஸியும் ஆடினர்.

Latest Videos

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! 16 சீசன்களில் 14 கேப்டன்கள்.. புதிய கோச்களும் நியமனம்

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான்(4) மற்றும் பாபர் அசாம்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பாபர் அசாம் 15 பந்தில் 6 ரன் அடித்து அணியின் ஸ்கோர் வேகத்தையும் கெடுத்துவிட்டு சென்றார். ஷான் மசூத்தும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ஃபகர் ஜமானுக்கு பதிலாக ஆடிய முகமது ஹாரிஸ், 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை விரைவில் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் 11 பந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பயத்தை காட்டிவிட்டுத்தான் சென்றார். அதன்பின்னர் இஃப்டிகார் அகமது பொறுப்புடன் நிலைத்து நின்று ஆட, நவாஸ் 22 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இஃப்டிகார் ஒருமுனையில் பொறுப்புடன் ஆட, மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஷதாப் கான் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். இஃப்டிகார் அகமதுவும் அரைசதம் அடித்தார். இஃப்டிகார் அகமது 35 பந்தில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்தில் 52 ரன்களும் விளாச 20 ஓவரில் 185 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

186 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரர்களான குயிண்டன் டி காக் ரன்னே அடிக்காமலும், ரைலீ ரூசோ 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த உலக கோப்பையில் ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக சொதப்பிவந்த தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். ஆனால் 19 பந்தில் 36 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்க அணி 9 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. மழைக்கு பின் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு, டி.எல்.எஸ் முறைப்படி 14 ஓவரில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனவே தென்னாப்பிரிக்க அணிக்கு மழைக்கு பின் 5 ஓவரில் 73 ரன்கள் தேவைப்பட்டது. தென்னாப்பிரிக்க அணியால் 5 ஓவரில் 39 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. 14 ஓவரில் 108 ரன்கள் மட்டுமே அடித்து 33 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங்கில் மட்டுமல்லாது இந்த போட்டியில் ஃபீல்டிங்கிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டது. அதன் பலனாகத்தான் 33 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியின் குறைந்தபட்ச அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்புடன் உள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணி அதன் கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தென்னாப்பிரிக்க அணி இருக்கும் ஃபார்மிற்கு நெதர்லாந்திடம் தோற்க வாய்ப்பேயில்லை. எனவே தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்புதான் அதிகமுள்ளது.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image