#ENGvsPAK தனி ஒருவன் லிவிங்ஸ்டனின் போராட்ட சதம் வீண்..! முதல் டி20யில் இங்கி.,யை வீழ்த்தி பாக்., அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 2:44 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அடைந்த படுதோல்விகளின் விளைவாக, மிகக்கடுமையான விமர்சனங்களை அந்த அணி எதிர்கொண்டது.

ஒருநாள் போட்டிகளில் அடைந்த படுதோல்விக்கு டி20 போட்டிகளில் வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நேற்று நாட்டிங்காமில் நடந்த முதல் டி20 போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து மிகச்சிறந்த தொடக்கத்தை பாகிஸ்தானுக்கு அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கே பாபர் அசாமும் ரிஸ்வானும் இணைந்து 150 ரன்களை குவித்துவிட்டனர். ரிஸ்வான் 41 பந்தில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் அசாம் 49 பந்தில் 85 ரன்களை குவித்தார். அதன்பின்னர் ஃபகர் ஜமான் 8  பந்தில் 24 ரன்கள், முகமது ஹஃபீஸ் 10 பந்தில் 26 ரன்கள் என பங்களிப்பு செய்ய 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 232 ரன்களை குவித்தது.

233 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டனை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டேவிட் மலான்(1), ஜானி பேர்ஸ்டோ(11), மொயின் அலி(1), ஜேசன் ராய்(32) ஆகியோர் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 82 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் லிவிங்ஸ்டன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் கேப்டன் ஒயின் மோர்கன்(16), லெவிஸ் க்ரெகோரி(10), டேவிட் வில்லி(16) ஆகியோரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் திடமான மனநிலையுடன் தனி ஒருவனாக நின்று அடித்து ஆடி போராடிய லிவிங்ஸ்டன் சதமடித்தார். 43 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்து லிவிங்ஸ்டனும் ஆட்டமிழக்க, 19.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி சார்பில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!