இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நடக்கும் ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 5 ஆண்டுகாலமாக கரண்ட் பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் முறையே 2-1 என்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்தப் போட்டியானது ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உகாண்டா – தொடரில் பங்கேற்கும் 20 அணிகளின் லிஸ்ட்!
போட்டி தொடங்க இன்னும் குறைவான நேரங்கள் உள்ள நிலையில், மைதானத்தில் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. ஏனென்றால், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. ரூ.3.16 கோடி நிலுவையில் உள்ள நிலையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் வைக்கவே மைதானத்தில் தற்காலிக இணைப்பு நிறுவப்பட்டது. ஆனால், இது பார்வையாளர்களின் கேலரி மற்றும் பாக்ஸ்களை உள்ளடக்கியது. ஜெனரேட்டர் பயன்படுத்தி ப்ளட்லைட் மின் விளக்குகளை ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராய்பூர் கிராமப்புற வட்ட பொறுப்பாளர் அசோக் கண்டேல்வால் கூறியிருப்பதாவது: மைதானத்தில் தற்காலிக இணைப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று கிரிக்கெட் சங்க செயலாளர் விண்ணப்பித்துள்ளார். தற்காலிக இணைப்புத் திறன் 200 கிலோவோல்ட். இதை ஆயிரம் கிலோ வோல்ட்டாக உயர்த்துவதற்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பணிகள் இதுவரையில் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அரை மராத்தான் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மின்சாரம் இல்லை என்று குற்றம் சாட்டினர். அப்போது, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், அது ரூ.3.16 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மைதானம் கட்டப்பட்ட பிறகு அதன் பராமரிப்பு பணியானது பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதவுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும்.
ஆனால், இதுவரையில் மின் கட்டணம் செலுத்தப்படாததால் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறைக்கு பலமுறை மின்வாரியத்தினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த மைதானத்தில் 3 சர்வதேச போட்டிகள் மட்டுமே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சட்டீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருணேஷ் சிங் பரிஹார் கூறியிருப்பதாவது: சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இன்றைய போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் உள்ளது. சர்வதேச போட்டிகளை ஜெனரேட்டர் மூலமாக நடத்துகின்றனர். மின் கட்டணத்தை பொறுத்த வரையில் எவ்வளவு பில் நிலுவையில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், CSCS என்ற பெயரில் தற்காலிக இணைப்பு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.