IND vs NZ முகமது சிராஜ் மிரட்டல் பவுலிங்.. ஸ்பின்னர்களும் அசத்தல்.! 38/6 என திணறும் நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 3:07 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 38 ரன்னுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் நேற்று(டிசம்பர் 3) தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில்லை 44 ரன்களுக்கு வீழ்த்திய நியூசிலாந்து இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல், அவரது அடுத்த ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

அதன்பின்னர் மயன்க் அகர்வாலும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயரை 18 ரன்னில் வீழ்த்தினார் அஜாஸ் படேல். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ரிதிமான் சஹா சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும்  மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்திருந்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே ரிதிமான் சஹாவை 27 ரன்னில் வீழ்த்திய அஜாஸ் படேல், அடுத்த பந்திலேயே அஷ்வினை கோல்டன் டக்காக்கி அனுப்பினார். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் சிறப்பாக ஆடினார். 150 ரன்கள் அடித்த மயன்க் அகர்வாலையும் அஜாஸ் படேலே வீழ்த்தினார். அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 52 ரன்களுக்கு அஜாஸின் சுழலின் விழ, கடைசி 2 விக்கெட்டையும் அவரே வீழ்த்தி, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 2ம் நாள் ஆட்டத்தின் 2வது செசனில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடிக்க, 2வது செசனில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் வில் யங் (4) மற்றும் டாம் லேதம் (10) ஆகிய இருவரையும் வீழ்த்திய முகமது சிராஜ், ரோஸ் டெய்லரையும் வெறும் ஒரே ரன்னில் வீழ்த்தினார்.

அதன்பின்னர் டேரைல் மிட்செலை 8 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, ஹென்ரி நிகோல்ஸை அஷ்வின் 7 ரன்னில் வீழ்த்தினார்.  இந்த போட்டியில் ஜடேஜாவிற்கு பதிலாக ஆட வாய்ப்பு கிடைத்த ஜெயந்த் யாதவ், அவரது முதல் ஓவரிலேயே ராச்சின் ரவீந்திராவை 4 ரன்னில் வீழ்த்த, 38 ரன்னுக்கே நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் விடப்பட்டது.  நியூசிலாந்து அணி படுமோசமாக பேட்டிங் ஆடிவரும் அதேவேளையில், இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். எனவே இந்த போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடரும். விரைவில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை இந்திய அணி முடித்துவிடும்.
 

click me!