அஜாஸ் படேலுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய 2 பவுலர்கள் யார் தெரியுமா..?

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 1:55 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து (10) விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் சாதனை படைத்த நிலையில், இதற்கு முன் அந்த சாதனையை படைத்த 2 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். கடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் ஃபாஸ்ட் பவுலர்கள் டிம் சௌதி மற்றும் கைல் ஜாமிசன் ஆகிய இருவரும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அந்த டெஸ்ட்டில் அஜாஸ் படேல் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்தின் ஃபாஸ்ட் பவுலர்கள் அசத்திய நிலையில், மும்பையில் நடந்துவரும் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஜாஸ் படேல்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்துவீச்சு இதுதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது பவுலர் அஜாஸ் படேல் தான்.  இதற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 பவுலர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

1. ஜிம் லேக்கர்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஜிம் லேக்கர் 1956ம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்த சாதனையை படைத்த முதல் பவுலர் என்ற பெருமையை பெற்றார்.

2. அனில் கும்ப்ளே

ஜிம் லேக்கர் இந்த சாதனையை படைத்ததற்கு பிறகு 43 ஆண்டுகள் கழித்து 1999ல் டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா (இப்போது அருண் ஜேட்லி மைதானம்) மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது என்பது சாதாரண காரியம் அல்ல. மிக மிக கடினமான விஷயம். அந்த சாதனையை அஜாஸ் படேல் செய்தது பெரிய விஷயம் என்றால், அதை ஸ்பின்னர்களை நன்றாக ஆடக்கூடிய இந்திய அணிக்கு எதிராக செய்தது தரமான சம்பவம்.

இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளே ஆகியோரின் பட்டியலில் அஜாஸ் படேலும் இணைந்துள்ளார்.
 

click me!