IND vs NZ இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார் Ajaz Patel

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 1:19 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபார சாதனை படைத்துள்ளார் அஜாஸ் படேல்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் நேற்று(டிசம்பர் 3) தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில்லை 44 ரன்களுக்கு வீழ்த்திய நியூசிலாந்து இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல், அவரது அடுத்த ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

அதன்பின்னர் மயன்க் அகர்வாலும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயரை 18 ரன்னில் வீழ்த்தினார் அஜாஸ் படேல். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ரிதிமான் சஹா சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும்  மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்திருந்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே ரிதிமான் சஹாவை 27 ரன்னில் வீழ்த்திய அஜாஸ் படேல், அடுத்த பந்திலேயே அஷ்வினை கோல்டன் டக்காக்கி அனுப்பினார். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் சிறப்பாக ஆடினார். 150 ரன்கள் அடித்த மயன்க் அகர்வாலையும் அஜாஸ் படேலே வீழ்த்தினார். அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 52 ரன்களுக்கு அஜாஸின் சுழலின் விழ, கடைசி 2 விக்கெட்டையும் அவரே வீழ்த்தி, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.  இதற்கு முன்பாக 1956ல் ஜிம் லேக்கர் என்ற பவுலரும், 1999ல் இந்தியாவின் அனில் கும்ப்ளேவும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். தற்போது அந்த பட்டியலில் அஜாஸ் படேல் இணைந்துள்ளார்.
 

click me!