IPL 2022 இந்த 6 பெரிய வீரர்களும் ஏலத்துக்கே போகமாட்டாங்க! அதுக்கு முன்னாடியே புதிய அணிகள் இவர்களை வாங்கிரும்

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 10:14 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் விடுவிக்கப்பட்ட பெரிய வீரர்களில் 6 பேர் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே, 2 புதிய அணிகளால் எடுக்கப்படுவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.

கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ரஷீத் கான், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல சிறந்த வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேஎல் ராகுல், ரஷீத் கான் ஆகிய வீரர்கள், ஊதியத்தை காரணம் காட்டி, ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக கூறி அவர்கள் ஆடிவந்த அணிகளிலிருந்து விலகிவிட்டனர்.

இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே புதிய அணிகளால் எடுக்கப்பட வாய்ப்புள்ள 6 வீரர்கள் யார் யார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, என்னுடைய முதல் தேர்வு கேஎல் ராகுல். பஞ்சாப் அணி கேஎல் ராகுலை தக்கவைக்க விரும்பியும், அவர் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் அணியிலிருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பாகவே ராகுலை லக்னோ அணி வாங்கி, அவரை கேப்டனாக நியமித்துவிடும். அடுத்தது ரஷீத் கான்.  அவரும் ஏலத்தில் இடம்பெறமாட்டார். அதற்கு முன்பாகவே புதிய அணி அவரை எடுத்துவிடும்.

என்னுடைய 3வது தேர்வு ஷ்ரேயாஸ் ஐயர். அவரை அகமதாபாத் அணி கேப்டனாக நியமிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட  ஷ்ரேயாஸ் ஐயர் அகமதாபாத்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேபோல, யுஸ்வேந்திர சாஹலும் அகமதாபாத் அணியால் எடுக்கப்படுவார்.

இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சிறந்த வீரர்கள் என்றாலும், இப்போதைக்கு இஷான் கிஷன் புதிய அணியால் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். கடைசியாக டேவிட் வார்னர். மிகப்பெரிய மேட்ச் வின்னரான டேவிட் வார்னரும் ஏலத்திற்கு முன்பாகவே கண்டிப்பாக புதிய அணியால் எடுக்கப்படுவார் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!