SL vs WI வெஸ்ட் இண்டீஸ் அணியில் பட்டைய கிளப்பும் தமிழ் வம்சாவளி ஸ்பின்னர்..! இலங்கையை கதறவிட்டார்

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 8:06 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் தமிழ் வம்சாவளி வீரர் வீராசாமி பெருமாள்.
 

எல்லா காலக்கட்டத்திலுமே இந்திய வம்சாவளி மற்றும் தமிழ் வம்சாவளி வீரர்கள் வெளிநாட்டு அணிகளில் ஆடியிருக்கின்றனர். அந்தவகையில், தற்போது கூட நியூசிலாந்து அணியில் ஆடிய ராச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் படேல் ஆகிய 2 இந்திய வம்சாவளி வீரர்கள் தான், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தோல்வியை தவிர்த்து போட்டியை டிரா செய்தனர்.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடிய தமிழ் வம்சாவளி வீரரான வீராசாமி பெருமாள் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 2 டெஸ்ட்டிலுமே தோற்று தொடரை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

முதல் டெஸ்ட்டில் ஆடாத வீராசாமி பெருமாள் என்ற தமிழ் வம்சாவளி வீரர், 2வது போட்டியில் ஆடினார். இடது கை ஸ்பின்னரான வீராசாமி, அந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் என மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.

32 வயதான வீராசாமி பெருமாளின் முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு முன், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கயானாவில் குடியேறினர். பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மீதான பற்று இன்னும் அதிகம் இருக்கிறது. அதனால் தான் இன்று வரை வீராசாமி பெருமாளின் குடும்பத்தினருக்கு தமிழ் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

13 வயது முதல் கிரிக்கெட் ஆடிவரும் வீராசாமி பெருமாள், 2006ம் ஆண்டு முதல் முதல் தர கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். 121 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 536 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீராசாமி பெருமாள், 95 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2012ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீராசாமி பெருமாள், இதுவரை தலா 7 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இலங்கைக்கு எதிராக ஆடிய 2வது டெஸ்ட் தான் வீராசாமியின் 7வது சர்வதேச டெஸ்ட் போட்டி. 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார் வீராசமி. அதில் 8 விக்கெட் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வீழ்த்தியது. இதுதான் அவரது பெஸ்ட் பவுலிங்.

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் வீராசாமி பெருமாள். 
 

click me!