நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அணிக்கு திரும்புவதாக தற்காலிக கேப்டனான டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று சம பலத்துடன் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளிலும் கட்டைவிரல் காயம் காரணமாக இடம் பெறாத நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அணிக்கு திரும்புவதாக நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் அணியின் தற்காலிக கேப்டனான டாம் லாதம் கூறியிருந்தார்.
இன்று நடக்கும் போட்டியில் டிம் சவுதி இடம் பெற்றால் மேட் ஹென்றி அல்லது லாக்கி ஃபெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த கேன் வில்லியம்சன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றார். ஆனால், அந்தப் போட்டியில் பேட்டிங்கின் போது கட்டைவிரலில் காயம் ஏற்படவே ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லாதம் கேப்டனாக செயல்பட்டார்.
நியூசிலாந்து பிளேயிங் 11:
டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, மேட் ஹென்றி அல்லது லாக்கி ஃபெர்குசன்
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்
இந்த நிலையில் தான் இன்றைய போட்டியிலும் கேன் வில்லியம்சன் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. ஆதலால், அவருக்குப் பதிலாக டாம் லாதம் தான் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 116 ஒரு நாள் போட்டிகளில் 58 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதில் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 385 ரன்கள் குவித்தது. மேலும், ரோகித் சர்மா 101 மற்றும் சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது.
இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 252 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 253 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.