இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தரம்சாலா ஸ்டேடியத்தில் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதுவரையில் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதற்கு காரணமாக இருந்தது நியூசிலாந்து அணி தான். அந்த தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியானது 18 ரன்களில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதுவரையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 9 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 5 முறை நியூசிலாந்தும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதே போன்று இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 116 போட்டிகளில் இந்தியா 58 போடிட்களிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை, ஒரு போட்டி டிரா செய்யப்பட்டது. இந்த நிலையில், தான் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தரம்சாலா மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி மோசமான ரெக்கார்ட்ஸ் வைத்துள்ளார். அவர் 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 20 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 14 ரன்கள் அடங்கும். இந்த மோசமான ரெக்கார்ட்ஸை ரோகித் சர்மா நிச்சயமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா விளையாடிய இந்த 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 4 போட்டிகளில் முறையே 0, 131, 86, 48 ரன்கள் என்று மொத்தமாக 265 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தரம்சாலா மைதானத்தில் இதுவரையில் 3 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், 2ஆவது பேட்டிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அதிகபட்சமாக இங்கிலாந்து 364/9 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஆப்கானிஸ்தான் 156/10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.