
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டிம் சவுதி. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 பயிற்சி போட்டி, 4 டி20 போட்டி மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது. இதே போன்று, 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என்று இங்கிலாந்து கைப்பற்றியது.
இதில், ஒரு நாள் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வலது கட்டை விரலில் காயம் அடைந்துள்ளார். கடந்த மாதம் 15 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 4ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கேட்சை பிடிக்க முயன்றபோது சவுதிக்கு வலது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்து ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. இருப்பினும், நியூசிலாந்து மருத்துவக் குழுவால் இறுதியில் அவர் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. தற்போது அவரது காயம் இன்னும் குணமடையாத நிலையில், அவர் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டி வரும் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
இதுவரையில், 154 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள டிம் சவுதி, 210 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதே போன்று 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் 370 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.