#NZvsBAN கான்வேயின் மற்றுமொரு காட்டடி பேட்டிங்..! வங்கதேசத்தை வச்சு செஞ்ச நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 28, 2021, 2:40 PM IST
Highlights

கான்வேயின் அதிரடியால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி வென்றது. 

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் ஃபின் ஆலன் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். மார்டின் கப்டில் 35 ரன் அடித்தார். 53 ரன்னுக்கு நியூசிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில், அதன்பின்னர் கான்வேயும் வில் யங்கும் இணைந்து சிறப்பாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 105 ரன்களை குவித்தனர்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கான்வே தொடர்ந்து அதிரடியை தொடர, வில் யங் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்ற கான்வே, இந்த டி20 போட்டியிலும் அபாரமாக ஆடி 52 பந்துக்கு 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். கான்வே சதத்தை தவறவிட்டிருந்தாலும்,  அவரது அதிரடியால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக அஃபிஃப் ஹசன் 45 ரன் அடித்தார். முகமது சைஃபுதீன் 34 ரன்னும் தொடக்க வீரர் முகமது நயீம் 27 ரன் அடித்தார். மற்ற அனைவருமே மிகச்சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், வங்கதேச அணி 144 ரன்கள் மட்டுமே அடித்ததால், 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
 

click me!