TNPL 2022: டையில் முடிந்த சேப்பாக் - நெல்லை போட்டி.. சூப்பர் ஓவரில் நெல்லை அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 23, 2022, 11:21 PM IST
Highlights

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இன்று தொடங்கியது. திருநெல்வேலியில் இன்று நடந்த முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் பிரதோஷ் பால்(7), பாபா அபரஜித் (2), பாபா இந்திரஜித்(3) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். அதனால் 27 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.

அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் சூர்யபிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சய் யாதவ். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். அரைசதம் அடித்த தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு சூர்யபிரகாஷும் சஞ்சய் யாதவும் இணைந்து 133 ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய சஞ்சய் யாதவ் 47 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவிக்க, 20 ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 184 ரன்களை குவித்தது.

185 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கௌஷிக் காந்தி அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மற்ற வீரர்கள் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கௌஷிக் காந்தி 64 ரன்களுக்கு 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

18 ஓவரில் சேப்பாக் அணி 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவரில் சேப்பாக் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹரிஷ் குமார் அபாரமாக பேட்டிங் ஆடி 12 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டத்தை டை செய்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த ஹரிஷ் குமார், 4வது பந்தில் சிக்ஸரும் கடைசி பந்தில் பவுண்டரியும் அடிக்க போட்டி டை ஆனது.

இதையும் படிங்க - ரூட் நிற்க வச்சா மட்டும் பேட் தனியா நிற்குது.. நாம வச்சா நிற்க மாட்டேங்குது! கோலியின் முரட்டு முயற்சி.. வீடியோ

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் அணி ஜெகதீசன் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் உதவியுடன் சூப்பர் ஓவரில் 9 ரன்கள் அடித்தது. 10 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெல்லை அணி இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றது.
 

click me!