சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தோனியின் பீல்டிங் செட்டப் தான் என்று சொல்லப்படுகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஹோம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
வரலாற்றை மாற்றி எழுதிய மஞ்சள் பாய்ஸ் – ஹோம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!
முதல் போட்டியில் டாஸ் மட்டுமே போட வந்த ருதுராஜ் கெய்க்வாட், அதன் பிறகு பீல்டிங் செட்டப் எல்லாவற்றையும் தோனி தான் மேற்கொண்டார். யாரை எங்கு நிறுத்த வேண்டும்? எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று கச்சிதமாக நிறுத்தி விக்கெட்டுகள் எடுத்தார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து மீண்டும் ஹோம் மைதானத்தில் சிஎஸ்கே 2ஆவது போட்டியில் நேற்று விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 46 ரன்னும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்னும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், ஒவ்வொரு விக்கெட்டிலும் தோனியின் பங்கு இருக்கிறது. எந்த பீல்டரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒவ்வொரு ஓவரிலும் தனது கேப்டன்ஸி அனுபவத்தை தோனி வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க உதவினார்.
நேற்றைய போட்டியில் ரச்சின் ரவீந்திரா மட்டும் 3 கேட்சுகள் பிடித்தார். ஒரு கேட்சை கோட்டைவிட்டார். இந்தப் போட்டியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஷ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பதிரனா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இப்படி களத்தில் எல்லாவற்றையுமே தோனி செய்யும் போது ஏன், அவரை அவசர அவசரமாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் தெரியவில்லை. கோடிக்கணக்கான ரசிகர்கள் தோனி தான் கேப்டனாக தொடர வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில், இந்த ஆண்டு அவர் ஓய்வு பெறுவதற்கான சூழல் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு புதிய கேப்டன் தடுமாறிடக் கூடாது என்பதற்காக இந்த ஆண்டே புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.