உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முகமது ஷமி 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியினர் விக்கெட் கைப்பற்ற தடுமாறினர். மேலும், வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டைவிட்டனர்.
இதையடுத்து ரோகித் சர்மா பவுலர்களை மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில் தான் முகமது ஷமி 32.2 ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தான் ஷமி தவறவிட்டார். இந்த நிலையில் அவரது விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஷமி தனது 50ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து அதே ஓவரில் டாம் லாதம் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதன் பிறகு நியூசிலாந்தின் அணியின் கடைசி நம்பிக்கையான டேரில் மிட்செல் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவ்வளவு ஏன், அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முகமது ஷமி (4 முறை) முதலிடம் பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார் 3 முறை வீழ்த்தி 2ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் ஷமி விளையாடிய 7 போட்டிகளில் மொத்தமாக 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஜாகீர் கான் 21 (2011) விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஒரே அணிக்கு எதிராக 2 ஆவது முறையாக முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.