நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய நியுசிலாந்து அணிக்கு முகமது ஷமி அதிர்ச்சி கொடுத்தார். தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் வில்லியம்சன் 73 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஷமி பந்தில் சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 181 ரன்கள் குவித்தது. அதே ஓவரில் டாம் லாதம் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ தொடங்கியது. ஒரு கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதில், பிலிப்ஸ் 33 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பும்ரா பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த சேப்மேன் 2 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிய டேரில் மிட்செல் 119 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 134 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பின் வரிசையில் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் 9, டிம் சவுதி 9, லாக்கி ஃபெர்குசன் 6 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக நியூசிலாந்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பையிலிருந்து நடையை கட்டியுள்ளது. நியூசிலாந்தை வீழ்த்திய நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும், 19 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை பழி தீர்த்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்!
இந்தப் போட்டியில் மட்டுமே முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஷமி தவிர, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜடேஜா விக்கெட்டுகள் கைப்பற்றாவிட்டாலும் 3 முக்கியமான கேட்சுகளை பிடித்தார். இவரைப் போன்று விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலும் 4 கேட்சுகளை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை! pic.twitter.com/48QEZ7wxCN
— Asianetnews Tamil (@AsianetNewsTM)