பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தை ஆண்ட்ரே ரசல் ரன் அடிக்க முடியாமல் விட, அந்த பந்தில் சிங்கிளுக்கு அழைத்த ரிங்கு சிங், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தேடிக்கொடுக்க, ரிங்கு சிங்குவை பாராட்டியுள்ளார் முகமது கைஃப்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிக்க, ராஜஸ்தான், மும்பை, லக்னோ, ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவ, இந்த போட்டியில் கேகேஆரும் இணைந்துவிட்டது.
சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் தான் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பேயில்லை. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம்.
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடிக்க, 180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில் நிதிஷ் ராணா அரைசதம் அடிக்க, ஆண்ட்ரே ரசலும் ரிங்கு சிங்கும் இணைந்து முடித்து கொடுத்தனர்.
ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு
18 ஓவரில் கேகேஆர் அணி, 154 ரன்கள் அடித்திருந்த கேகேஆர் அணிக்கு கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட, சாம் கரன் வீசிய 19வது ஓவரில் ஆண்ட்ரே ரசல் 3 சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்ததால் கடைசி ஓவரில் கேகேஆருக்கு வெறும் 6 ரன் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் 4 பந்தில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, அவர் யார்க்கராக வீசிய 5வது பந்தை ஆண்ட்ரே ரசலால் அடிக்க முடியவில்லை. ஆனாலும் கடைசி பந்தில் பெரிய ஷாட் ஆடவல்ல வீரர் ஆண்ட்ரே ரசல். ஆனால் 5வது பந்தை அடிக்காமல் விட்ட ரசலை சிங்கிளுக்கு அழைத்தார் ரிங்கு சிங். ரசல் ரன் அவுட்டானார். ஆனால் பேட்டிங் முனைக்கு சென்ற ரிங்கு சிங், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கேகேஆருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இந்த சீசனில் தொடர்ச்சியாக கேகேஆருக்காக டெத் ஓவர்களில் அபாரமாக ஆடி வெற்றிகளை தேடிக்கொடுத்து தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட, கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத அந்த இலக்கை கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை முடித்து கொடுத்து அசத்திய ரிங்கு சிங், அதன்பின்னர் தொடர்ச்சியாக கடைசி பந்துகளில் பெரிய ஷாட் ஆடி த்ரில் வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார்.
இந்நிலையில், கடைசி ஓவரின் 5வது பந்தில் ரசல் மாதிரியான அதிரடி ஃபினிஷரை சிங்கிள் அழைத்த ரிங்கு சிங்கின் நம்பிக்கையை பாராட்டியுள்ளார் முக்மது கைஃப்.
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், முழு கிரெடிட்டும் ரிங்கு சிங்குவிற்குத்தான். ரசல் மாதிரி ஒரு வீரரை கடைசி ஓவரின் 5வது பந்தில் சிங்கிள் அழைத்தார் ரிங்கு. இதுவரை இந்திய அணிக்கு ஆடிராத ஒரு வீரரான ரிங்கு சிங், ரசல் மாதிரியான ஃபினிஷர் பந்தை மிஸ் செய்ததும் சிங்கிள் அழைக்கிறார் என்றால் அவரது நம்பிக்கை எந்தளவிற்கு இருக்கிறது என்று பாருங்கள். இதுதான் ஐபிஎல் என்று முகமது கைஃப் தெரிவித்தார்.