ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க். இடது கை ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் எதிரணி வீரர்களை மிரட்டிவிடுவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 77 டெஸ்ட் போட்டிகளில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 109 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடி முறையே 219 மற்றும் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி அசத்திவருகிறார். முதல் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய, இன்று விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஷுப்மன் கில் (0), ரோஹித் சர்மா (13), சூர்யகுமார் யாதவ் (0), கேஎல் ராகுல்(9) ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்கள் மற்றும் சிராஜ் ஆகிய 5 வீரர்களையும் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார். இந்திய அணியை வெறும் 117 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருட்ட உதவினார் மிட்செல் ஸ்டார்க். 118 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 11 ஓவரிலேயே அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தார் மிட்செல் ஸ்டார்க். ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க். வெறும் 109 ஒருநாள் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் லசித் மலிங்காவின் (8 முறை) சாதனையை முறியடித்து, 3ம் இடத்தை ஷாஹித் அஃப்ரிடி (9) மற்றும் பிரெட் லீ(9) ஆகியோருடன் பகிர்ந்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
இந்த பட்டியலில் வக்கார் யூனிஸ்(13 முறை) மற்றும் முத்தையா முரளிதரன் (10 முறை) ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். இன்னும் ஒருமுறை 5 விக்கெட் வீழ்த்தினால் முரளிதரன் சாதனையை சமன் செய்வார் ஸ்டார்க். இன்னும் 2 முறை 5 விக்கெட் வீழ்த்தினால் முரளிதரன் சாதனையையும், 5 முறை 5 விக்கெட் வீழ்த்தினால் வக்கார் யூனிஸின் சாதனையை முறியடிப்பார் மிட்செல் ஸ்டார்க்.