IND vs AUS: மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்.. சொற்ப ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி..! ஆஸி.,க்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 19, 2023, 4:06 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 26 ஓவரில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுவதால் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். மேலும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேலை சேர்த்தது ஏன்? இது உலக கோப்பைக்கான திட்டம்.. கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், நேதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகியோரும் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். முதல் போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக பிரச்னை இருக்கிறது. அது மீண்டும் அம்பலப்பட்டது. இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை நடக்கவிருப்பதால் இந்த பிரச்னைக்கு அவர்கள் தீர்வு காண வேண்டியது அவசியம். ஏனெனில் இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால் ரோஹித், கோலி, ராகுல் ஆகிய வீரர்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும். 

ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்க, 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. நிலைத்து நின்று ஆடி 31 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த கோலியும் சீன் அபாட்டின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற 71 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ஜடேஜா 16 ரன்களுக்கு நேதன் எல்லிஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அக்ஸர் படேல் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி(0), முகமது சிராஜ்(0) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க, 26 ஓவரில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. அக்ஸர் படேல் 29 ரன்கள் அடித்தார்.

ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆர்சிபி வீரர்.! ஏலத்தில் நம்பி எடுத்து ஏமாந்த ஆர்சிபி.. மாற்று வீரர் அறிவிப்பு

அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 
 

click me!