தடையையும் மீறி இந்தியாவிலிருந்து ஆஸி.,க்குள் நுழைவது எப்படி..? ரூட்டு போட்டு கொடுத்த மைக்கேல் ஸ்லேட்டர்

By karthikeyan VFirst Published May 3, 2021, 9:01 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் வர்ணனையாளர்களில் ஒருவரான ஆஸி.,யை சேர்ந்த மைக்கேல் ஸ்லேட்டர், கொரோனா பயோ பபுளிலிருந்து வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார்.
 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசன் எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கே கொரோனா உறுதியானதையடுத்து, கிரிக்கெட் வீரர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு வளைய நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வெளிநாட்டு வீரர்களான கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஆண்ட்ரூ டை, லிவிங்ஸ்டோன் ஆகியோர் ஐபிஎல்லில் இருந்து விலகி கடந்த வாரம் அவரவர் நாட்டுக்கு சென்றனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு, அது ஆஸ்திரேலியர்களாகவே இருந்தாலும் சரி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் ஐபிஎல் முடிவதற்குள் நிலைமை சீரடைந்துவிடும். அதன்பின்னர் செல்லலாம் என்ற மனநிலையில் தான் ஐபிஎல்லில் ஆடும் ஆஸி., வீரர்களும், ஆஸி.,யை சேர்ந்த வர்ணனையாளர்களும் இருந்தனர்.

ஆனால் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தபோதிலும், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் ஷர்மா, சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி, சிஎஸ்கே பஸ் க்ளீனர், டெல்லி கிரிக்கெட் மைதான ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வெளிநாட்டு வீரர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

ஐபிஎல்லில் இருந்து விலகவே நினைத்தாலும் இனிமேல் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவிலிருந்து ஆஸி.,க்கு செல்ல முடியாது என்பதால், புது ரூட்டை தேடுகின்றனர். அந்தவகையில், ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர், இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து எப்படியாவது ஆஸி.,க்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சென்றுள்ளார். இதே ரூட்டையே பின்பற்றும் முனைப்பில் சில வீரர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!